இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்தாமையால் சிறுவர்களும், இளைஞர்களும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை முழுமையாக கைது செய்யப்படவில்லை என்றும் இதில் ஆட்சியாளர்களின் தலையீடு காணப்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது மிகவும் கடினமான விடயமாக இருப்பதனால், போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.