இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.
2023 வசந்த கால கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வொஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
இதன்போது உலக வங்கி குழுமம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் அன்னா பிஜெர்டேவை சந்தித்து கலந்துரையாடினார்.
அவருடன் இலங்கையின் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கான அதன் நன்மைகள் குறித்து கலந்துரையாடியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்போது சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு குறித்து பேசியதாக ஷெஹான் சேமசிங்க கூறினார்.