1980களில் முதலாம் கட்ட ஈழப்போரின்போது இயக்கங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படம் உமர் முக்தாரின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமாகும். இப்படத்தில் ஓரிடத்தில் உமர் முக்தாரிடம் அவருடைய போராளிகள் வந்து கேட்பார்கள்…கைது செய்யப்பட்ட எதிரிப் படைகளை நாங்கள் சித்திரவதை செய்து கொல்வோமா? என்று. உமர் முக்தார் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பார்.
அவர்கள் எங்களுடைய போராளிகளை கைது செய்யும் பொழுதும் அப்படித்தான் கொன்றார்கள்.எனவே நாங்களும் அவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதில் கொடுக்க வேண்டும் என்று போராளிகள் கூறுவார்கள். அப்பொழுது உமர் முக்தார் மிக நிதானமாக ஒரு பதில் சொல்வார் “எங்களுடைய எதிரி எங்களுடைய ஆசிரியர் அல்ல” என்று.
இது ஒரு முக்கியமான பதில். போராடும் இனங்கள், போராட்டத்திற்காகவே ஒரு தலைமுறையை இழந்த இனங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம். எங்களுடைய எதிரி எங்களுடைய ஆசிரியர் அல்ல.
அண்மை மாதங்களாக ஏன் அண்மை ஆண்டுகளாக என்று கூடச் செல்லலாம், வடக்கில் நடப்பவற்றை பார்க்கும்போது உமர் முக்தாரின் மேற்படி வாசகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. கடந்தகிழமை மட்டும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன.ஒன்று பண்ணை வாசலில் நைனா தீவு நாகம்மாளுக்கு ஒரு சிலை. கீரிமலையில் ஆறுமுக நாவலருக்கு ஒரு சிலை.இதற்கு முந்தைய வாரங்களிலும் அவ்வாறு பல சிலைகள் திறக்கப்பட்டன.அவற்றுள் திருவள்ளுவரும் உட்பட சமயப் பெரியார்கள் மற்றும் மன்னர்கள் கடவுளர்களின் சிலைகள் அடங்கும்.
சிலைகளை எழுப்புவது எல்லா சமூகங்களிலும் உண்டு.சிலைகள் தேவை.சமூக உருவாக்கிகளையும் பேராளுமைகளையும் பொதுவெளியில் சிலைகளாக நிறுத்துவது ஒரு நல்ல முன்னுதாரணம்.அது அடுத்தடுத்த தலைமுறைக்கு எப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முன்னுதாரணத்தைக் கொடுக்கும். ஒரு வெளிப் பார்வையாளருக்கு அந்த சமூகத்தின் முன்னோடிகள் யார் என்பதை அறிந்து கொள்ள அது உதவும்.அதைவிட முக்கியமாக ஒரு சமூகம் அதன் பொதுவெளியில் எப்படிப்பட்ட சிற்பங்களை,சிலைகளை நிறுவுகிறது? அவற்றின் கலைப்பெறுமதி எத்தகையது? போன்ற அனைத்தும் ஒரு வெளிப் பார்வையாளருக்கு அந்த சமூகத்தை மதிப்பிட உதவும். அந்த சமூகத்தின் விழுமியங்கள்,அந்த சமூகத்தின் கலை உச்சங்கள்,கலைப் பாரம்பரியம் போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ள அது உதவும். இந்த அடிப்படையில் கூறின் சிலைகள் தேவை.
ஆனால் நாட்டில் தற்பொழுது நிறுவப்படும் பெரும்பாலான சிலைகள் மேற் சொன்ன வகைக்குள் மட்டும் வருபவை அல்ல. சில சமயப் பெரியார்கள் சமூகப் பெரியார்களின் சிலைகளைத்தவிர,ஒருபகுதி கடவுள் சிலைகள் மேற்கண்ட நோக்கத்தின் அடிப்படையில் நிறுவப்படவில்லை.அவை கடந்த பல மாதங்களாக தமிழ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் போட்டிக்குச் சிலை எழுப்பும் ஒரு போக்கின் விளைவுகளே.
சிலைகளை அரசியல் உள்நோக்கத்தோடு முதலில் நிறுவியது சிங்கள பௌத்த அரசியல்தான். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியது போல, புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைத்தது சிங்களபௌத்த அரசியல்தான்.அதுபோலவே மன்னாரில் கத்தோலிக்கர்கள் தங்களுடைய முதன்மையை நிலைநாட்டுவதற்கு ஆங்காங்கே சிலைகளை வைப்பதுண்டு என்று மன்னாரில் உள்ள இந்துக்கள் குற்றம் சாட்டுவதுண்டு.
ஒரு கடவுள் சுருவத்தை யார் வைத்தது என்று தெரியாமல் இரவோடு இரவாக அனாமதேயமாக முதலில் வைத்து விட்டால், அதைப் பின்னர் அகற்றுவது கடினம். ஏனென்றால் அது மக்களுடைய நம்பிக்கைகளோடு தொடர்புடையது. வைத்த சிலையை அகற்றுவது சமயங்களுக்கு இடையே, சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும். அதை அனாமதேயமாக அகற்றலாம். அல்லது உடைக்கலாம். அதுவும் முரண்பாடுகளை ஏற்படுத்தும். எனவே ஒரு சிலையை வைத்தால் வைத்ததுதான். படிப்படியாக அதற்கு ஒரு பீடம் வைக்கப்படும். பின் கூரை வைக்கப்படும்.அதன் பின் சில சமயம் பூஜைகளும் நடத்தப்படும்.இத்தனைக்கும் அவை பொதுவெளிச் சிலைகள்.கற்பகக் கிரகங்களுக்குள் இருக்கும் மூலவிக்கிரகங்கள் அல்ல.இந்துமத நம்பிக்கைகளின்படி அவை ஆவாகனப்படுத்தப்பட்ட சிலைகள் அல்ல. அவை பொதுவெளிச் சிற்பங்கள். அவை வழிபாட்டுக்குரியவை அல்ல. ஆனால் நாட்டில் வழிபாட்டுருக்களுக்கும் பொதுவெளிச் சிற்பங்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாத ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது.
சிங்கள பௌத்த அரசியல்தான் முதலில் சிலைகளை வைக்கத் தொடங்கியது. அங்கே மதப் பல்வகைமைக்கு எதிரான மத மேலாண்மை என்ற உள்நோக்கம் இருந்தது.சிங்கள பௌத்தர்கள் இல்லாத இடங்களில் வைக்கப்பட்ட எல்லாச் சிலைகளுமே மத மேலாண்மையின் குறியீடுகள்தான்.தமிழ்ப் பகுதிகளை பிடித்து வைத்திருக்கும் படையினர் தமது வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கும் சிலைகளும் அத்தகையவைதான்.அவை ஆக்கிரமிப்புச் சின்னங்களாகத்தான் தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றன. இவ்வாறு புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்பின் குறியீடுகளாக மாற்றியது சிங்கள பௌத்த அரசியல்தான்.
அதற்கு மறுப்பாக இப்பொழுது இந்துக்களும் சிலைகளை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.தமிழ்ப் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு போக்கு இது.முதலில் ஒரு சிவலிங்கம் யார் வைத்தது என்று தெரியாமல் அனாமதேயமாக இரவோடு இரவாக வைக்கப்படும்.பின்னர் அதனை அலங்கரிக்கும் வேலைகளும் பாதுகாக்கும் வேலைகளும் படிப்படியாகச் செய்யப்படும்.அப்படி ஒரு பெரிய சிவலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மணிச் சந்தியில் வைக்கப்பட்டது.கண்டிவீதியில் யாழ்ப்பாணம் வரவேற்கின்றது என்று காணப்படும் வளைவுக்கு அருகே அது வைக்கப்பட்டது. தற்காலிகமாக மண்குவியல் ஒன்றை ஏற்படுத்தி அதன் மீது அது வைக்கப்பட்டது.வைக்கப்பட்ட புதிதில் அது நேராக நீர்மட்டம் பார்த்து வைக்கப்படவில்லை. எனவே அந்தச் சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்ந்து நின்றது. ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு கட்டிடம் கிடைத்துவிட்டது. அதை இனி அங்கிருந்து அகற்ற முடியாது. அதை அகற்றினால் அது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்களின் மனங்களை காயப்படுத்தக்கூடும்.
சில வாரங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கிலும் அவ்வாறு ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டது. அதற்கும் இனிமேல் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்பலாம்.சில நாட்களுக்கு முன் பண்ணையில் நைனா தீவு அம்மனின் சிலை வைக்கப்பட்டது.இந்தச் சிலைகளை வைப்பது உருத்திர சேனை என்று நம்பப்படுகிறது.சிவசேனையைப் போல உருத்திரசேனையும் அண்மை மாதங்களாகத் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் சிலை வைப்பது இன்னொருபுறம் மதம்மாற்றும் ஆவிக்குரிய சபைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது.
ஒரு மதப் பிரிவினர் அதிகம் வாழும் இடங்களில் பொதுவெளியில் அவ்வாறு சிலைகளை நிறுவுவது என்பது நம்பிக்கைகள் சார்ந்த ஒரு விடயம். ஆனால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல சிங்கள பௌத்த அரசியலுக்கு எதிரான ஒரு மறுத்தானாக அதை வியாக்கியானப்படுத்தும் போதுதான் சில கேள்விகள் எழுகின்றன.
ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டம் தற்காப்பாக சிலைகளை நிறுவுவதற்கு ஒரு நியாயம் உண்டு. மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிராக தமது மரபுரிமைச் சின்னங்களை முன்னிறுத்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு உரிமை உண்டு. ஆனால் அவ்வாறு சிலைகளை நிறுவும் பொழுது பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
முதலாவதாக,அனாமதேயமாக சிலைகளை வைப்பது என்பது சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை.நிச்சயமாக அவை தான்தோன்றி லிங்கங்கள் அல்ல.உண்மையான தான்தோன்றிச் சுருவங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு புனிதப்பெறுமதி உண்டு.உமர் முக்தார் கூறியதுபோல சிங்கள பௌத்தத்தின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி திட்டத்தை அப்படியே சைவர்களும் கடைப்பிடிக்க தேவையில்லை.
இரண்டாவதாக,வைக்கப்படும் சிலைகள் தொடக்கத்தில் யாராலும் கவனிக்கப்படாது அனாதைகளாகக் காணப்படும்.அக்காலகட்டத்தில் அவற்றை பறவைகள் எச்சமிட்டு அசிங்கப்படுத்தும்.அந்த சிலையை அல்லது சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் பொறுப்பேற்கும்வரை அவை கவனிப்பாரற்றுக் கிடக்கும். இது குறிப்பிட்ட சிலையை வைத்தவர்களின் மத நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. தனது இஷ்ட தேவதையின் சிற்பத்தை இவ்வாறு அனாதையாக விட்டுச் செல்லும் எவரும் அந்த இஷ்ட தேவதையை அவமதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?இது இரண்டாவது விடயம்.
மூன்றாவது விடயம், அச்சிலைகளின் கலையம்சம் தொடர்பானது. இது குறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.இந்த விடயத்தில் துறை சார்ந்த நிபுணர்களான சிற்பிகளை அணுகி சிலைகளை வடிவமைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி சிலைகளை வைப்பவர்களிடம் உண்டா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
நாலாவது விடயம்,சிலைகளை வைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்லது மத மேலாண்மைக்கு எதிராக தன்னுடைய நம்பிக்கைகளை முன்னிறுத்தும் ஒரு சமூகம் எப்படிப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளை முதலில் செய்ய வேண்டும்?
மரபுரிமை சொத்துக்களை பேணுவது என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையாகும்.அதாவது அரசியல் உரிமை. தமிழ் மக்களுக்கு அந்த உரிமை கிடையாது.ஆனாலும் தமது மரபுரிமைகளை பாதுகாப்பதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை தமிழ்மக்கள் அதற்குரிய அரசியல் மற்றும் அழகியல் அர்த்தத்தில் திட்டமிட வேண்டும்.அதில் இருக்கவேண்டிய அழகியல்,நவீனத்துவம் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.இது தொடர்பாக உலகளாவிய அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஓர் அரற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிராக எப்படிப்பட்ட தற்காப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது சில மத நிறுவனங்கள் மட்டும் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அது ஒரு அரசியல் சமூக பொருளாதார கலாச்சார நடவடிக்கை.அது ஒரு கூட்டு நடவடிக்கை. அதைக் கூட்டாகத் திட்டமிட வேண்டும்.உலகத் தரத்துக்குத் திட்டமிட வேண்டும். நவீனமாகத் திட்டமிட வேண்டும். ஒரு ஆக்கிரமிப்பு அரசியலுக்கு எதிராக அந்த ஆக்கிரமிப்பு அரசியலின் பாணியிலேயே பதில் சொல்வது வேண்டுமானால் போர் விதிகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம். நிச்சயமாக மரபுரிமைக் களத்துக்கு அது பொருத்தம் இல்லை.