இலங்கையின் பல பாகங்களில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ள நிலையில் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில், இந்த வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த மாற்றம் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணிக்கின்றனர்.
சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கும் பணிகளின் போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த அனைவரும் உறுதி பூண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.