தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மெக்கார்த்தியை கலிபோர்னியாவில் சந்தித்ததாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க மண்ணில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
லொஸ் ஏஞ்சல்ஸின் வடமேற்கில் உள்ள சிமி பள்ளத்தாக்கில் உள்ள டொனால்ட் ரீகன் ஜனாதிபதி நூலகத்தில் பிரசன்னமாகி இரு தலைவர்களும் கைலாகு கொடுத்துக்கொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பில், சபாநாயகர் மெக்கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அமெரிக்காவிற்கும் தாய்வான் மக்களுக்கும் இடையிலான நட்பு ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை.
ஜனாதிபதி சாய் இங்-வெனை வரவேற்பது எனது மரியாதை. தாய்வான் ஒரு வெற்றிகரமான ஜனநாயகம், வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் மற்றும் அறிவியலில் உலகளாவிய தலைமையைக் கொண்டுள்ளது.
எங்கள் ஒத்துழைப்பு உரையாடல் மற்றும் பரிமாற்றம் மூலம் தொடர்ந்து விரிவடைகிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் தாய்வான் ஜனாதிபதி கூறுகையில், ‘அருமையான வரவேற்புக்கு மிக்க நன்றிகள். கலிபோர்னிய சூரிய ஒளியை இரசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மெக்கார்த்தியின் முன்னோடியான நான்சி பெலோசி ஆகஸ்ட் மாதம் எமது தீவுக்குச் வந்துசென்ற பிறகு, எட்டு மாதங்களில் மெக்கார்த்தியை இரண்டாவது தடவை சந்திக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை சீனா ஏற்காத ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, தாய்வான் கடற்கரைக்கு அருகில் பல கப்பல்களை சீனா அனுப்பியது.
பீஜிங் பெரிய அளவிலான ரோந்து மற்றும் மீட்புக் கப்பலை மத்திய மற்றும் வடக்கு தாய்வான் ஜலசந்திக்கு மூன்று நாள் கூட்டு ரோந்து மற்றும் ஆய்வு நடவடிக்கைக்காக அனுப்பியது என்று சீனாவின் புஜியன் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், தாய்வான் ஜனாதிபதியின் போக்கு வொஷிங்டனின் நீண்டகால கொள்கையுடன் ஒத்துப்போகிறது.
அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக சாய் இங்-வென் அமெரிக்காவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.