ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, வடமாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன. எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதில் பயனில்லை, எனவே அந்த உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என டெலோ மற்றும் புளொட் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.