வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்ததாகவும் இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை. நாட்டில் இருந்த முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர்.
அவ்வாறான சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் நான் நாட்டின் பொறுப்பை ஏற்று, சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன்.
ஏனென்றால் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் பெருமையுடன் கண்ணியமாக வாழவே விரும்புகிறார்கள்.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடினமான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இதே போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
அங்கு ஒரு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல்களில் இருந்து விலகியது. ஆனால் நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சரியான முகாமைத்துவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்து, பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.
இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்த நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.