தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது கணிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமும், வருடாந்திர அடிப்படையில் டொலர் மதிப்பீட்டு அளவில் மதிப்பீடு செய்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜேர்மனிக்கு அடுத்ததாக ‘ஆசியாவின் பவர்ஹவுஸ்’ என்று அறியப்படும் இந்தியா 5ஆவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2சதவீதமாக இருக்கின்றது. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி இன்னமும் அதிகரிக்கலாம். இருப்பினும், தற்போதைய நிலையில் உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழு வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் பிராந்தியத்தை சேர்ந்த மற்ற பெரும்பாலான நாடுகளை விட, வட்டி விகித உயர்வு மற்றும் நிதி இறுக்கம் ஆகியவை குறைவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள், தற்போதைய பொருளாதார மீட்சியை இழக்காமல் காக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் உதவுகின்றன.
உலக பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை, இந்தியாவின் ஏற்றுமதியிலும், முதலீட்டு வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனினும் மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு செலவினங்களையும், பல்வேறு வணிக வசதிகளையும் அதிகரித்துள்ளது.
இது தனியார் முதலீட்டை உயர்த்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதற்கு வழிகோலுகின்றது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி 9.7சதவீதமாக இருந்தது. இது வலுவான தனியார் நுகர்வு மற்றும் நிலையான முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில் தான், இந்தியா பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அயல்நாட்டுக்கு முன்னுரிமை என்ற தனது கோட்பாட்டுக்கு அமைவாக கைகொடுத்து வருகின்றது.
நெருக்கடியில் இருந்த தீவு தேசத்தினை முழ்கிவிடாதிருப்பதற்காக உடனடியாக 4பில்லியன் அமெரிக்க டொலர்களை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி வழங்கியது. இந்தத் தொகையானது தற்போது, சர்வதேச நாயண நிதியம் பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்கும் 2.9பில்லின் அமெரிக்க டொலர்களையும் விடவும் அதிகமானதாகும்.
அதேநேரம், இந்த நிதியுதவிக்கு அப்பால், அத்தியாவசியப் பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்தியா வழங்கியதோடு முதலீடுகள், சுற்றுலாத்துறை வளர்ச்சி, கலாசார பிணைப்புக்கள் உள்ளிட்டவற்றிலும் பங்களிப்பை ஆற்றிவருகின்றது.
அதுமட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகையைப் பெறுவதற்கு கூட இந்தியாவே பிணையெடுப்பாளராக செயற்பட்டதோடு, அதன் முழுத்தொகையை பெறுவதற்காக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கடன்மறுசீரமைப்புக்கான பொதுத்தளமொன்றையும் உருவாக்கியுள்ளது. எனினும் சீனாவின் பங்கேற்பின்மையால் அந்தச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நாட்டின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்தியா உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் அளித்து வருகின்ற ஒத்துழைப்புக்கள் அளப்பரியவை.
இந்தப் புரிதலுடன் இலங்கை தனது மூலோபாயச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாயின், தெற்காசியப் பிராந்திய தலைமையான இந்தியாவுடன் கூட்டிணைந்தே பொருளாதாரத்தினை மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கான சதகமான நிலைமைகள் விரைவில் ஏற்படும்.