எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற செய்தியை மக்கள் வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற செய்தியை மக்கள் வழங்கியுள்ளார்கள் ஆனால், இதனை இன்னமும் ஏற்றுக் கொள்ளாத தரப்பினர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை நாடு முன்னேற்றமடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மீண்டும் எரிபொருள் வரிசை, மின்வெட்டு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
அப்படி நடந்தால் மீண்டும் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். இதனை பயன்படுத்தி தங்களின் அரசியலை கொண்டு செல்லலாம் என்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.
நாடு இன்று மீண்டும் பொருளாதார ரீதியாக பலமடைந்து வருகிறது. இந்த நிலையில் ஜுன் 8 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துங்கள் அது பிரச்சினையில்லை. ஆனால், இதன் ஊடாக மக்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் அது பயங்கரவாதச் செயற்பாடாகவே கருதப்படும்.
நாட்டில் போராட்டங்களில் ஈடுபட அனைவரும் உரிமை உள்ளது. எனினும், போராட்டம் எனும் போர்வையில் பயங்கரவாதச் செய்றபாடுகளில் ஈடுபட்டார், பேர வாவியில் அதிக தண்ணீர் உள்ளது.
அதனை முதலில் பயன்படுத்துங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்படவில்லை என்றால் தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளுங்கள்.
ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.