உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதே சமயம் உக்ரேனும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரேனில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரேனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் சபோரிஜியா, டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரேன் தெரிவித்துள்ளது.
ஆனால் உக்ரேன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில், உக்ரைனின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.