ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பல கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளன.
இந்தக் கட்சிகளுடன் மாதாந்தம் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை மொட்டுக் கட்சி தொடர்ந்தும் வழங்கும்.
மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியவுடன் ஆராயப்படும்.
இதுகுறித்து கட்சித் தலைவர்களுடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்கள். அனைத்து செயற்பாடுகளும் அரசமைப்புக்கு உட்பட்டுதான் நடக்கும். அமைச்சுப் பதவிகளை வழங்காமல் இருப்பதால், மொட்டுக் கட்சியின் சில மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஏனெனில், தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள்.
அப்படியான மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால், அதிருப்தி ஏற்படத்தான் செய்யும்.
அத்தோடு, கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கியவுடன், அவர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் காரர்களும், பாதாள உலகக் குழுவினரும், விபசாரத்தில் ஈடுபடுபவர்களும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தினால் இறுதியில் நாட்டுக்கு கிடைத்த நன்மைதான் என்ன?
மாறாக பல பிரதேசங்கள் அழிவைத்தான் சந்தித்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றே சிலர் அமைச்சுப் பதவிகளைக் கோருகிறார்கள். இப்போதுவரை மொட்டுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் பிரச்சினையொன்று கிடையாது.
ஆனால், எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் தற்போது கூற முடியாது” என்றார்.