ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அதன் ஐம்பத்து மூன்றாவது அமர்வு இன்று முதல் ஜூலை 14 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு இந்த அமர்வு தொடங்கும் போது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உரையாற்றவுள்ளார்.
இதன்போது செக்கியா, அர்ஜென்டினா, காபோன், கானா, பெரு, குவாத்தமாலா, பெனின், கொரியா குடியரசு, சுவிட்சர்லாந்து, பாகிஸ்தான், ஜாம்பியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய 13 நாடுகள் தொடர்பான மதிப்பாய்வின் இறுதி முடிவுகள் பரிசீலிக்கப்படும்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை, ஜெனிவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இலங்கை,நிகரகுவா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து வோல்கர் டர்க், வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன்போது ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.