யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொழும்பு இந்துக் கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து பலோ ஓண் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கொழும்பு இந்துக் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் டிலோஜன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க யாழ்ப்பாணம் இந்து சார்பில் பந்து வீச்சில் கஜாநாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள கொழும்பு இந்துக்கல்லூரி இன்றைய ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களை பெற்றது. இரண்டு நாள் போட்டியாக இந்த தொடர் நடைபெறுகின்றமையுமை குறிப்பிடத்தக்கது.