இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார் விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதேநேரம் மட்டக்களப்பு, திருகோணமலை, மத்தள, கட்டுநாயக்க உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.
கொரோனா தொற்றை அடுத்து நிறுத்தப்பட்ட பல விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில் இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை இடம்பெறுவதாக கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பலாலி விமான நிலைய ஓடு பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.