300 ஏக்கர் பரப்பளவுள்ள மலைப்பாங்கான நிலத்தை 20 ஆண்டுகளுக்குள் காடாக மாற்றி மணிப்பூரின் இம்பால் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இம்பாலின் புறநகரில் உள்ள லாங்கோல் மலைத்தொடரில் உள்ள காடுகளில் 100க்கும் மேற்பட்ட தாவர இனங்களோடு சுமார் 25 வகையான மூங்கில்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி, 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த வனப்பகுதியில் மான், முள்ளம்பன்றி, பாம்பு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.
சிறுவயதில் இருந்தே தீவிர இயற்கை ஆர்வலராக இருந்த மொய்ராங்தெம் லோயா, 2000-ம் ஆண்டு சென்னையில் பட்டம் பெற்றார்.
காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் தரிசு நிலத்தை அடர்ந்த பசுமையான காடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்துள்ளது.
“ஆறு வருடங்கள் இந்த குடிசையில் தனிமையில் வாழ்கின்றேன். இது எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது. முன்னர் மனிதர்களால் அழிக்கப்பட்ட இந்த பகுதியை நான் மூங்கில், கருவேலம், பலா மரங்கள் மற்றும் தேக்குகளை நாட்டி செழிப்பாக்கியுள்ளேன்” என கூறியுள்ளார்.
வாழ்வாதாரத்திற்காக ஒரு மருந்தகத்தில் பணிபுரியும் லோய்யா, காடுகளை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதே தனது வாழ்நாள் பணியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.