தரமற்ற மருந்துகளின் பயன்பாட்டில் நாட்டில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் பதிவாகி வரும் நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு இன்று ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள தடுப்பூசி மருந்து பயன்பாட்டின் காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
கேகாலை வைத்தியசாலையில் இருந்து நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பெற்றுக் கொண்ட 57 வயதான அஜித் விஜேசிங்க என்ற நபரே இவ்வாறு மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 13 நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டதாகவும், இதுவே இவ்வாறு ஒவ்வாமை ஏற்படக்காரணமாக இருக்கலாம் எனவும் கேகாலை ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.