இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் அப்ரர் அஹமட் 4 விக்கெட்டுக்களையும், நஷீம் ஷா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில், தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 134 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 576 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக அப்துல்லா ஷபீக் 201 ஓட்டங்களையும், அகா சல்மான் 132 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணியின், ஹசித பெர்னாண்டோ 133 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து, இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணிசார்பில் அதிகபடியாக ஏஞ்சலோ மெத்யூஸ் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் நோமன் அலி 70 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இன்னிங்ஸ் ஒன்றில் நோமன் அலி பெற்றுக்கொண்ட அதிக விக்கெட்டுக்கள் இதுவாகும்.
தன்படி, இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.