நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பிரவேசித்துள்ள சந்திராயன் – 3 விண்கலம், படம்பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் அடங்கிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பகிர்ந்துள்ளது.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 615 கோடி இந்திய ரூபாய் செலவில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி நள்ளிரவு 12.05 அளவில் விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.47 அளவில் நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் ஆய்வு கலம் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன் பின்னர் விண்கலத்திலிருந்து ரோவா கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வுகளை முன்னெடுத்திராத நிலையில், சிக்கலான 41 நாட்களை கொண்ட பயணத்திற்காக ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், 22 நாட்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
இந்தநிலையில், குறித்த விண்கலம், படம்பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் அடங்கிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.