வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனையடுத்து ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இன்று காலை முதல் விசேட கிரியைகள் நடைபெற்று மூலவர் அபிசேகம் மற்றும் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலை உள்வீதி வலம்வந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
10தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் பிற்பகல் தம்ப பூஜை சுவாமி உள்வீதியுலாவும் மாலையில் தம்ப பூஜைஇவசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7.30மணிக்கு தேரோட்டமும் மறுதினம் 16ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00மணிக்கு மாமாங்கேஸ்ரவர் தீர்த்தக்குளத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகத்தில் பக்தர்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.