நாட்டில் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகவும் வலுவான ஊழலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றி, அதை சட்டமாக உறுதிப்படுத்தி, தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றும் இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது என்றும் அவரின் அனுபவங்களை தேசிய நலனுக்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில் அரச பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாடாளுமன்றத்தில் காணப்படும் அரசியல் ஒற்றுமையின்மை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும், அதனால் அரசியல்வாதிகளின் பலவீனமாக விளையாட்டுக்களை விடுத்து ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.