முதல்வர் பிரேம் சிங் தமாங், சிக்கிமின் சோரெங் மாவட்டத்தில் முதலாவது வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
சிக்கிம் நாட்டின் முதல் பூச்சிய கரிம மாநிலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று கூறிய முதல்வர் தமாங், இயற்கை விவசாயம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படும் சிறந்த மையமாக அப்பல்கலைக்கழகம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, குறித்த மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் ஆகிய துறைகளில் கல்வி கற்பதற்கு வெளிமாவட்டங்களுக்குச் செல்கிறார்கள். டெஹ்ராடூனில் மேற்குறித்த பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை மேற்கொண்டு வரும் 500இக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சந்தித்தேன் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சிக்கிமில் மேற்படி கற்கைகளை ஆரம்பிப்பதற்கான தற்காலிக இடங்களை விரைவில் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதோடு சிக்கிம் சட்டசபை இந்த ஆண்டு தொடக்கத்தில் சிக்கிம் பசுமை வேளாண் பல்கலைக்கழக சட்டம், 2023ஐ நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.