தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான ‘ஷி யான்-6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.
அவ்வாறு வருகை தரும் குறித்த சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதோடு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் செல்லவுள்ளது.
இந்தவிடயத்தினை இலங்கை கடற்படை உறுதி செய்துள்ளதோடு, நாரா எனப்படும், தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகமை நிறுவனமும் தம்முடன் இணைந்து குறித்த கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக அப்பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக ஆராய்ச்சிக்காக கடல் நீர் மாதிரிகளைப் பெறுவதற்காகவே குறித்த கப்பல் விஜயம் செய்வதாகவும் பிறிதொரு தகவலும் உள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுண் துறைமுகத்துக்குச் சந்தம் சந்ததியின்றிச் சென்றிருந்த ‘ஹாய் ஜங் 24’ என்ற சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கடந்த 10ஆம் திகதி காலையிலேயே கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்தது.
கொழும்பில் சீனாவின் நிதிபங்களில் உருவாக்கப்பட்டுள்ள முனையத்துக்குள் எவ்விதமான ஆரவாரமுமின்றி வருகை தந்த 129 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், 138 மாலுமிகளுடன் மூன்று நாட்கள் முழுமையாக இளைப்பாறிவிட்டுச் சென்றிருக்கின்றது.
குறித்த கப்பலின் தொடர்ச்சியாக ‘ஷி யான்-6’ வருகை தரவுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக்கொண்டுள்ளது. இதனால் ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயம் சம்பந்தமாக நேரடியாகவும், நேர்மறையாகவும் அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவ்வாறான நிலையில், ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயத்தில் அரசாங்கம் எந்த முடிவினை எடுத்தாலும் அது சீனாவை, அல்லது இந்தியாவை நிச்சயமாக உரசிப்பார்ப்பதாகவே இருக்கப்போகின்றது.
முன்னதாக, சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங்-5’ வருகை தருவதற்கு இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அனுமதி வழங்கியது.
அக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிக்கப்பட்டு, பெருமடுப்பிலான வரவேற்பும் ராஜபக்ஷ அணியினரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. அதற்குப் பின்னரான காலத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக இந்தியா பாரிய அளவில் தனது கரிசனை களையும், அழுத்தங்ளையும் அரசாங்கம் மீது பிரயோகித்திருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டபாய ஜனாதிபதியாக இருந்தபோதே அனுமதி பெறப்பட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு விட்டதாக கூறி இந்தியாவினை சமாளித்திருந்தார்.
எனினும், இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் எந்தவொரு வெளிநாட்டுப் போர்க்கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
குறிப்பாக, சீனாவின் பிறிதொரு கப்பலான செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட ‘யுவான் வாங் 6’ அம்பாந்தோட்டைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரிய போதும், வழங்கப்பட்டிருக்கவில்லை.
அத்தோடு, எந்த நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகங்களுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் எவ்வாறு அனுமதியை அளிப்பது என்பது குறித்து கொள்கையொன்றை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் அதுபற்றி தற்போது வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை. இந்த நிலையில் தான் ‘ஷி யான்-6’ இன் வருகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நிச்சயமாக பூகோளத்தில் பிராந்திய இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஏற்கனவே 2014இல் கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகையை அடுத்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.