உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடியான சூழல் இருந்தபோதிலும், இலங்கையும், பாகிஸ்தானும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள அதிகப்படியான கடன்களால் மீளமுடியாத நிலைமைக்குள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவின் பாரிய செல்வாக்கின் கீழ் வந்துள்ளமைக்கு பல சான்றுகள் உள்ள நிலையில் அந்நாடுகள் தங்களை அறியாமலேயே பாரிய கடன் பொறிகளுக்குள் நுழைந்துவிட்டன என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகின்றது.
சீனாவின் பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் பங்காளிகளாக உள்ள இவ்விரு நாடுகளும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக பாரிய கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
இதனால் பல கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இப்போது முடங்கும் நிலைமை ஏற்பட்ட நிலையிலிருந்து மீளமுடியாதவொரு சூழல் உருவாகியுள்ளதால் இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் 10 ஆண்டுகளை நிறைவு செய்தபோதும் மேம்பாடுகள் காணப்படவில்லை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடம் 2013இல் 45 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான திட்டமிடப்பட்ட முதலீடுகளுடன் ஆரம்பமாகியபோதும், காலப்போக்கில், அது 62 பில்லியனுக்கும் அதிகமாகியதோடு இதில் பாகிஸ்தானும் தனது பங்கிற்கு 25 பில்லியன்களை முதலீடு செய்ய வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டன.
இதனை அண்மித்து பாகிஸ்தானில் 2018 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை நாட்டின் கடனை உயர்த்தியது. அத்தோடு, அதிகரித்து வரும் பயங்கரவாதச் செலவுகளும் அதிகரித்ததோடு, வெளிநாட்டு முதலீடுகளும் குறைவாக இருந்தமையால் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டது.
இதனால், பாகிஸ்தான் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனைப் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அத்தோடு, பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவின் தொகை 30சதவீதமாக உயர்ந்தது. மேலும் சீன வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் 5.5 முதல் 6சதவீதமான வட்டிக்கு கடன் வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் 2021-2022 நிதியாண்டில், பாகிஸ்தான் 4.5பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீன வர்த்தக நிதி வசதியைப் பயன்படுத்தியதற்காக சுமார் 150 மில்லியன் டொலர்களை வட்டியாகச் செலுத்தியது. எனவே, சீனாவின் புதிய கடன் பாகிஸ்தானின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், இந்தியாவின் துணையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதியான 2.9பில்லியன் டொலர்களை பெறுவதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ள இலங்கை தற்போது உடன்பாடுகளை அமுலாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட கடன்வசதியின் இரண்டாவது தொகையைப் பெறுவதற்கான மீளாய்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது வரையில் முக்கிய விடயமான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு மேற்கொள்ள முடியாது இலங்கை சிக்கித் தவிக்கின்றது.
குறிப்பாக, வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, யப்பான், பாரிஸ் கிளப் உள்ளிட்ட தரப்புக்கள் பொதுத்தளத்தில் இணைந்து கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அழைப்பினை விடுத்துள்ள போதும் தற்போது வரையில் சீனா அதற்கு தயாராக இல்லாத நிலைமையே நீடிக்கின்றது.
இந்தக் காரணத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு விடயம் தொடர்ச்சியாக காலதாமதப்படுத்தப்பட்டு வருவதோடு, பல்வேறு வாய்ப்புக்களும் இழக்கப்பட்டு வருகின்றன.
எனவே, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் எதிர்கால மீட்சிக்கு தற்போது பொறுப்புச்சொல்ல வேண்டிய நிலையில் சீனா உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.