ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின், சுப்பர்-04 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு 214 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், துனித் வெல்லாலேகே 5 விக்கெட்டுகளையும் சரித் அசலங்க 4 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் சற்று நேரத்தில் 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இலங்கை கிரிக்கெட் அணி, துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியில் பதிவான சாதனைகள்- மைல்கல்!
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பத்தாயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த 15ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேவேளை இந்தியா சார்பாக பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் வேகமாக பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார். முதலாவது இடத்தில் விராட் கோஹ்லி உள்ளார். அவர் 205 இன்னிங்சுகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.
மேலும், இந்தப் போட்டியின் போது ரோஹித் சர்மா 51ஆவது அரைசதத்தை கடந்தார். இது இலங்கை அணியுடனான 7ஆவது அரைசதமாகும்.
இதற்கு அடுத்தப்படியாக ரோஹித் சர்மா 241 இன்னிங்சுகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.
இதுதவிர, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் இணைந்து வேகமான ஐந்தாயிரம் என்ற ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்துள்ளனர். இருவரும் இணைந்து 86 இன்னிங்சுகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
5 வருடங்களுக்கு பிறகு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஒருநாள் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை. இறுதியாக 2018ஆம் ஆண்டு அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், எதிரணியை அதிகமுறை ஆல்-அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்த அணி என்ற பெருமையை இலங்கை கிரிக்கெட் அணி பதிவுசெய்துள்ளது. இலங்கை அணி அதிகப்பட்சமாக 14 முறை எதிரணியை ஆல்-அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்துள்ளது.
இப்போட்டியில் இலங்கை வீரர் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது ஆசியக் கிண்ண வரலாற்றில் பந்து வீச்சாளரொருவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது சந்தர்ப்பமாக பதிவானது. இதற்கு முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கெதிராக 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்ததே சாதனையாக உள்ளது.