இவ்வாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று (03) இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நதீஷா தில்ஹானி லேகம்கே (Nadeesha Dilhani Lekamge) 61.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
17 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் தடகள பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் சீனா 161 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 297 பதக்கங்களை வென்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் 33 தங்கம், 47 வெள்ளி, 50 வெண்கலம் என 130 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 32 தங்கம், 42 வெள்ளி 65 வெண்கலம் என 139 பதக்கங்களை வென்று தென்கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் இந்தியா 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ள இதேநேரம் இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் 26 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.