அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது.
இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவமானது இணையத்திலும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வாளர்கள் விளக்கமளிக்கையில் ”மனிதர்களை போல எல்லா உயிரினங்களும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் இனச்சேர்க்கையில் ஈடுபடாது. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு காலம் இருக்கும். அதுபோல முதலைகளுக்கு மேலே குறிப்பிட்டதை மாதிரி, மழைக்காலம்தான் இனப்பெருக்க காலமாகும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தபோது அதிலிருந்து வந்த அதிர்வலைகள் முதலைகளுக்கு இடியை நினைவுபடுத்தியிருக்கலாம். எனவே மழைக்காலம் வந்துவிட்டது என உடனடியாக இனச்சேர்க்கையில் ஈடுபட தொடங்கியிருக்கலாம்” எனத் தெரவித்துள்ளனர்.