நாட்டில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபைக்கு, தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய , மாலைதீவுகளில் உள்ள ஏர்னஸ்ட் என்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் சிரேஷ்ட பட்டயக் கணக்காளரும், முன்னாள் ஆலோசகருமான அர்ஜுன ஹேரத் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அரச தரப்புச் சட்டத்தரணி நிசித் அபேசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி சௌமியா அமரசேகர, டிஜிட்டல் சட்ட நிபுணரும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்ட வரைவு குழுவின் தலைவருமான ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, சர்வதேச தர நிர்ணய அமைப்பின் சான்றளிக்கப்பட்ட கணக்காய்வாளரும் தொழில்நுட்ப முகாமைத்துவ நிபுணருமான பிம்சர செனவிரத்ன, பொறியியல் மற்றும் டிஜிட்டல் மூலோபாய நிபுணர் ஷெஹான் விஜேதிலக ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இலங்கையின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம். 19 மார்ச் 2022 ஆம் திகதி சபாநாயகரால் சான்றளிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றிய முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது.
21 ஜூலை 2023 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இதன் ஐந்தாவது பகுதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், அரசு நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொடர்பாடல் செயல்பாடுகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களால் பொதுமக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமானது தனியுரிமைச் சட்டத்தின் உலகளாவிய முன்னேற்றத்திற்கும் அரசு மற்றும் தனியார் துறையின் டிஜிட்டல் மூலோபாயங்களுக்கும் அமைவாக மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
தேசிய டிஜிட்டல் மூலோபாயம் மற்றும் இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்துடன் இணைந்து, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சுயாதீன மேற்பார்வை பொறிமுறையின் ஊடாக தனிப்பட்ட தரவுகளின் சரியான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் உள்ள மேற்பார்வை தரப்பினர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்க்கப்படுகிறது.