2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்துள்ளது.
டெல்லியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ஓட்டங்களினால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ஓட்டங்களையும் இக்ராம் அலிகில் 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் அடில் ரஷித் 3 விக்கெட்களையும் மார்க் வூட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஹரி புரூக் 66 ஓட்டங்களையும் டேவிட் மலான் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.
நியூசிலாந்தில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ணத்தொடரில் தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்த ஒரே வெற்றி இதுவாகும்.