2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 38 ஓட்டங்களினால் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இந்நிலையில் நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கிய துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 43 ஓய்வார்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக லுங்கி இன்கிடி, மார்கோ ஜன்சன், கார்கிஸோ றபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 246 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் 3 விக்கெட்களையும் பௌல் வன் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி ஒரு நாள் போட்டிகளில் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்தைத் தவிர பலமிக்க அணியை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.