வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மயிலத்தமடு, மாதவனைப்பகுதிகளில் உள்ள பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையானது அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதேவேளை தமிழர்களுடைய கால்நடைகளும் சுட்டுக்கொல்லப்படுகின்றன.
இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மௌனமாக இருப்பதுடன் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இவ்விடயம் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை.
தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியாகும், அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புகளையும் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவரும் நேரத்தில் திருகோணமலையிலும் அதேநிலைமையினை எதிர்கொண்டுள்ள காலச்சூழலில் தொடர்ந்தும் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்,வஞ்சிக்கப்படுகின்றோம்.
அதற்கு எதிராகவே மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது எங்களது கடமையாகும்.இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களை அகற்றுமாறு கூறிய பின்னரும் அப்பகுதியில் புத்தர்சிலையினை வைத்தார்கள்,சட்ட விரோதமாக அம்பிட்டிய தலைமையிலான அராஜககுழு தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.
அதுமட்டுமல்லாது வாய்பேசாத மாடுகள் வெடிவைத்து கொல்லப்படுகின்றன. பௌத்தர்கள் மாடுகளை கொலைசெய்துவருவது அவர்களின் மதக்கொள்கைக்கு எவ்வாறு சரியானது என கேட்கத்தோன்றுகின்றது. எனவே இதுதொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் விரைவில் நாங்கள் வடக்கும் மற்றம் கிழக்கில் மாபெரும் மக்கள் அலையினை உருவாக்கி அரசாங்கத்திற்கு ஒரு பதிலைக் கூறுவோம்” இவ்வாறு சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.