இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கு பிரச்சினையான கப்பல்கள் நாட்டுக்கு வருவதை நிறுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவின் பிரகாரம், வெளிநாட்டுக் கப்பல்கள் அடுத்த வருடம் இலங்கைப் பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவை இரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் பெப்ரவரியில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை அனுப்புவதற்கு சீனா அனுமதி கோரியுள்ள நிலையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக இரண்டு சீனக் கப்பல்கள் வந்ததைப் போலவே இந்தக் கப்பலின் வருகை குறித்தும் இந்தியாவின் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக இராஜதந்திர மட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன.