இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.
இந்தியா, அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவின் Shi Yan 6 எனும் கப்பல் வருகைத் தந்திருந்தது.
இந்த நிலையில் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான ஷியாங் யங் ஹொங் – 3 எனும் கப்பலை இலங்கைக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள சீனா மீண்டும் அனுமதி கோரியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கைக் ஏற்கனவே வருகைத் தந்து ஆய்வுகளில் ஈடுபட்ட சீனாவின் Shi Yan 6 எனும் கப்பல் நேற்று மீண்டும் இலங்கைக்கு வருகைத் தரவிருந்ததாக தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த கப்பல் மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்த நிலையில், குறித்த கப்பல் தொடர்ந்தும் இந்து சமுத்திரத்தில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.