AI பல்வேறு வகையில் நமது வேலைகளை எளிமைப்படுத்தி நமக்கு உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. இதுபோன்று தொழில்நுட்பத்தில் இருக்கும் வாய்ப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களைத் தவறாகச் சித்திரிப்பது, பிரபலங்கள், நடிகைகள் முகங்களை ஆபாசமாகச் சித்திரித்து வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வது, குரல்களை மாற்றுவது எனப் பல குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவது போன்ற போலியான வீடியோ ”Deepfake Video’ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க, அதேபோல நடிகை கத்ரீனா கைஃபின் போலியான வீடியோவும் வைரலானது. டெல்லி பொலிஸார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து இந்த வீடியோக்களின் ‘URL’-யைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்காக உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதையடுத்து தற்போது நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போன்ற போலியான வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகவே ரீல்ஸ் டிரெண்டில் ”Get Ready With Me’ என்ற டிரெண்ட் பிரபலமானது. அதாவது ஒருவர் எப்படி தன் அலுவலகத்துக்கோ, ஷாப்பிங்கிற்கோ தயாராகி வெளியே கிளம்புகிறார், என்னென்ன உடைகள் அணிகிறார், எந்தெந்த மேக்கப் சாதனங்களை உபயோகிக்கிறார் என்பதை எல்லாம் விரிவாகச் சொல்லுவார். இதன் மூலம் அந்தந்த உடை நிறுவனங்கள் மற்றும் மேக்கப் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். இதற்காக அந்த இன்ஃப்ளூயன்சருக்குப் பணமும் கொடுக்கப்படும். அத்தகைய ”Get Ready With Me’ வீடியோ ஒன்றில்தான் கஜோலின் முகம் ‘DEEPFAKE ‘ செய்யப்பட்டிருக்கிறது.