”சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்” என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதக் கலையானது ஆண்களை மகிழ்விப்பதற்காக ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாக இது பார்க்கப்படுவதாகவும் அண்மையில் அப்துல் ஹமீட் ஸராயி என்ற மௌலவி தெரிவித்திருந்தார்.
இதனை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது கருத்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன.
இது விடயமாக பொலிஸார் சுயாதீன விசாரணை செய்து குறித்த உலமாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மற்ற இனங்களின் மதகுருக்கள் எமது மார்க்கம் தொடர்பில் ஏதாவது பிழையான கருத்துக்களை முன்வைத்தால் கொதித்தெழும் இலங்கையின் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனம் காத்திருப்பது கவலையளிக்கிறது.
பிற சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தந்த மார்க்கத்தை பின்பன்றும் நாம் எமது சமூக உலமாக்கள் பிழை விட்டாலும் அதை சுட்டிக்காட்டவேண்டியது எமது கடமையாக உள்ளது. இதை செய்யாது மௌனம் காப்பது ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான விம்பத்தை உருவாக்கும்.
இப்படியான மௌனமான போக்குகள் எதிர்காலத்தில் எமக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இதனை தவிர்க்கும் வகையில் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் குரலெழுப்ப வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.