சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ, ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3,226 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தன் இனிமையான குரலின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவின் சிறந்த – தனித்துவமிக்க பின்னணி பாடகியாக இருப்பவர் தேன் இசை குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பி.சுசீலா. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின்; கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பாடகி பி.சுசீலா தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியல் பாடகி பி. சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர், ‘நீ இல்லாத உலகத்திலே’ என்று பி. சுசீலா அவர்கள் பாடிய பாடலை பாடி, அவரை சிறப்பித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு மேலும் இசை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.