ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றார்.
அதன்படி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என்றும் அவற்றை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல்களை தொடர்ந்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கும் எதிராக வாக்களித்த 77 பேருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே ஏற்படுத்தியதாகவும் ஆகவே தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலே பிரச்சினை தீவிரமடைய காரணமா என கூறியுள்ளார்.
சட்டத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்றும் ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை என கூறிக்கொண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்களை விமர்சிக்கக் கூடாது என்றும் அவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.