தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர்.
தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 82 நாட்களாக பண்ணையாளர்கள் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது.
சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் அதனை செய்படுத்த பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லை. அதுமட்டுமில்லாது எமது கால்நடைகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டாளும் அவர்கள் எமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதன்காரணமாக பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதால் மனநோயிக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.