மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவாகி இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சுல்தான்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கில் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டும் இருந்தார்.
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 18ஆம் திகதி வாதம் நிறைவுற்றிருந்த நிலையில், நவம்பர் 27ஆம் திகதிக்கு வழக்கை நீதிபதி யோகேஷ் யாதவ் ஒத்திவைத்திருந்தார்.
அன்றைய தினத்தில் ராகுல் ஆஜராகாததால் நேற்றையதினம் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் நேற்றும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை என்பதால் எதிர்வரும் வரும் ஜனவரி 6-ல் ராகுல் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் மீண் டும் அழைப்பாணை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.