நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய உட்துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் பகிரப்படவுள்ளது.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு அம்சங்களை மீளாய்வு செய்யவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உறுதியான செயல்திட்டத்தை வகுக்க உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் கைகளில் புகைக் குப்பியுடன் குதித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இதேவேளையில் மக்களவைக்கு வெளியே நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இருவர் கோஷமிட்டு கைதாகியிருந்ததுடன், அவர்களிடமிருந்தும் வண்ண புகைக் குப்பிகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த 4 பேருடன் சேர்த்து இந்தச் சம்பவத்தில் பிரதானமாகச் செயற்பட்ட லலித் மோகன் ஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மகேஷ் குமாவத் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.