நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளதால் அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது.
அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம்.
அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்.
பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.