அனைத்துக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு இரண்டு பெரிய தேர்தல்களை எதிர்கொள்வதால் நாட்டிற்கு கடினமான ஆண்டாக இருக்கும் என்றும் மேலும் ஒவ்வொரு துறையிலும் பயனுள்ள மறுசீரமைப்பு இல்லாமல் நாட்டை முன்னேற்றாது என்பதை அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடம் பொய்யாகச் கூறிவந்தால் இந்த நாடு இன்னும் மூன்று மாதங்களிலேயே வீழ்ச்சியடையும் என்றும் ஆகவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் இல்லை என அரசாங்கம் மார்தட்டிக்கொண்டாலும் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மாததிற்கு ஒரு குடும்பம் ஒன்றுக்கு 75,000 ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அதே குடும்பத்திற்கு இப்போது குறுகிய காலத்திற்குள் 175,000 ரூபாய் தேவைப்படுவதாக புள்ளியியல் துறை சுட்டிக்காட்டியுள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.