முதியவர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டின் இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை புடின் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற குறித்த நிகழ்சியில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர், ”நாட்டில் முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் கூட உயர்வடைந்துவிட்டன. சாமானியர்கள் முட்டை வாங்கவே சிரமப்பட வேண்டி உள்ளது” எனக் கவலை தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த புடின் ”நான் இந்நிலை ஏற்பட்டமைக்கு மன்னிப்புக் கேட்கின்றேன். எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நல்ல சூழ்நிலை உருவாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் போர் காரணமாக ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.
குறிப்பாக அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடையால் பல நாடுகளும் ரஷ்யாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகள் 40 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.