சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 274 ஓட்டங்களை குவித்துள்ளது.
சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குஷால் மெண்டிஸ் முதலில் துடுப்பெடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இருபுறமும் மூன்று வீரர்கள் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகின்றனர். அதன்படி துடுப்பாட்ட சகலதுரை வீரர் ஜனித் லியனகே அணியின் 4-வது இடத்தில் களமிறங்கி விளையாடியிருந்தார்.
அதே நேரத்தில் பராஸ் அக்ரம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் தபிவா முஃபுட்சா ஆகியோர் சிம்பாப்வே அணியில் இணைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதலாவது ஓவரின் 5 ஆவது பந்தில் முதலாவது விக்கெட்டை இழந்தது. அவிஷ்க பெர்னாண்டோ எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து குஷால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 8 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்தது.
8.6 ஆவது ஓவரில் சதீர சமரவிக்ரம 41 ஓட்டங்களை பெற்றிருந்த போது எர்வினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த ஜனித் லியனகே 24 ஓட்டங்களோடு வெளியேறினார்.
தொடர்ந்த்து சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் குஷால் மெண்டிஸ் 46 ஓட்டங்களோடும் சஹான் ஆராச்சிகே 11 ஓட்டங்களோடும் தசுன் ஷானக 8 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து 36.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனை தொடந்து வந்த மகேஷ் தீக்ஷன 10 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
46 ஆவது ஓவரை வீசிக்கொண்டிருந்த சிம்பாவே அணியின் வேகப்பந்து வீச்சாளரருக்கு காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 48.2 ஆவது ஓவரில் துஷ்மந்த சமீர 18 ஓட்டங்களுடன் முசரபானியின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்.
இதன் பின்னர் 101 ஓட்டங்களை பெற்றபோது ஸ்டம்ப் முறையில் அட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் சிம்பாவே அணி சார்பாக ரிச்சர்ட் ங்கராவா, முசரபானி மற்றும் ஃபராஸ் அக்ரம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.