பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும்.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது நாம் ஓரளவு மீள் எழுந்து வருகின்றோம். என்றாலும் அது முழுமை பெறவில்லை. அது முழுமை பெற வேண்டுமாயின் நாம் இன்னும் கடுமையாக செயற்பட வேண்டும்.
பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம். அதனை எல்லோராலும் செய்ய முடியும்.ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது என்பது தான் கடினமான விடயம். ஆகவே நாம் பிரச்சினைகளுக்கு தீர்வுகைளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் எம்மைப் பொருத்தமட்டில் உரிமை என்பது ஒரு கண்ணாக இருந்தால் அபிவிருத்தி என்பது மறு கண்ணாக இருக்க வேண்டும். உரிமையுடன் கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலைக் கட்டமைப்பதன் ஊடாக மாத்திரம் தான் எமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.