இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று சிம்பாவே அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இலங்கை அணியை T20 போட்டியில் சிம்பாவே அணி வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரரான பத்தும் நிஸ்ஸங்க 2 ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் ஆட்டமிழக்க தொடந்து 4 ஆவது பந்தில் குஷால் பெரேரா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து 3 ஆவது ஒவரின் 4ஆவது பந்துவீச்சில் குஷால் மெண்டீசும் ஆட்டமிழந்து வெளியேறிய 5 ஆவது ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்க இலங்கை அணி 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேந்த மத்தியூஸ் மற்றும் அசலங்க நிதானமாக துடுப்பெடுத்தாட இலங்கை அணி 8.4 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்தது.
சிறப்பாக விளையாடிய சரித் அசலங்க 31 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் மத்தியூஸ் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை குவித்தது.
தொடந்து 17 ஆவது ஒவரின் 5 ஆவது பந்தில் 86 ஓட்டங்களோடு சரித் அசலங்க ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது அணியின் மொத்த ஓட்டம் 145 ஆக இருந்தது.
இதேவேளை மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மத்தியூஸ் அரைச்சதம் அடிக்க தசுன் சானக 9 ஓட்டங்களோடு அட்டமிழந்து வெளியேறினார்.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை குவித்தது. இதனை தொடந்து 174 ஓட்டங்களை எடுத்தால் என்ற வெற்றி இலக்கோடு சிம்பாவே அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.
10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து சிம்பாவே அணி 75 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஏர்வின் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின்னர் 96 ஓட்டங்களை சிம்பாவே அணி பெற்றிருந்த போது பென்னட் ஆட்டமிழக்க தொடர்ந்துவந்த சிக்கந்தர் ராசா 8 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து சீன்வில்லியம் ஒரு ஓட்டத்தோடும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஏர்வின் 70 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்ற போது சிம்பாவே அணி வீரர் லாங்கே சிறப்பாக ஆடி சிம்பாவே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.