சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள லொரென்சோ சோன் 4 கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க சோமாலிய கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, சோமாலியாவின் கடற்படைத் தளபதி அட்மிரல் அப்திவர்சமே ஒஸ்மானுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி கண்ணநாதன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை கூட்டு நடவடிக்கை மையத்தின் ஊடாக இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்க முடியும் என சோமாலிய கடற்படைத் தளபதி கூறியதாகவும் கென்ய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விரைவில் விடுவிக்க சோமாலிய அரசு உறுதி பூண்டுள்ளதாக கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை கடற்படையினரை மீட்க உதவுமாறு பல இலங்கைத் தூதுவர்கள் சோமாலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல நாள் கப்பலை மீட்க இலங்கை கடற்படையினருடன் மத்தியஸ்தம் செய்யுமாறு ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள இலங்கை தூதுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைனில் உள்ள கூட்டு கடல் படைக்கு இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
39 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பஹ்ரைனின் கூட்டு கடல்சார் படை, கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பைக் கையாளும் ஒரு அமைப்பாகும்.
மேலும், சக்திவாய்ந்த கடற்படை தொழில்நுட்பம் கொண்ட நாடுகளுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி திக்விட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லொரென்சோ சோன் 4 என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சீஷெல்ஸ் அருகே சர்வதேச கடல் பகுதியில் உள்ளது. இதில் 6 இலங்கை மீனவர்கள்; சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.