கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவும், சட்ட விரோத மணல் அகழ்வு செயற்பாடுகள் காரணமாகவும் சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதி மற்றும் உள்ளகவீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறன.
இதனால் அப்பகுதியில் நோயாளர் காவு வண்டியைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்
குறித்த பகுதியில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால் தற்போது பேருந்து சேவையும் இடம்பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் மீன்பிடி தொழிலுக்காக செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும்” இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.