இன்று (02) பிற்பகல் சுகாதார அமைச்சில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது.
இதன்படி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தம் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று அதன் செயற்பாடு காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று மட்டுமின்றி இன்றும் நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி கடந்த 16ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறாயினும் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று காலை முதல் மீண்டும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் தலைமையிலான அரச தாதியர் சங்கமும் கலந்து கொண்டதுடன், ஏனைய தாதியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கவில்லை.
எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில், மருத்துவமனைகளை நடத்துவதற்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டனர், மேலும் கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனைகள் உட்பட 52 மருத்துவமனைகளில் சேவைகளைப் பராமரிக்க முப்படையைச் சேர்ந்த 1022 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.