பல ஆண்டுக்காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாக் கனியாக இருந்த இரட்டை சதம் என்ற கனியை முதல்முறையாக ருசிபார்த்தவர் என்ற பெருமைக்குரியவர் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களை பெற்று உலக கிரிக்கெட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சச்சினுக்கு பிறகு, ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், சேவாக், கிறிஸ் கெய்ல், பகர் சமான், இசான் கிசான், சுப்மான் கில், க்ளென் மேக்ஸ்வெல் என பல வீரர்கள் இரட்டை சதத்தை ருசிபார்த்து விட்டார்கள்.
ஒருநாள் உலகக்கிண்ணம், ரி-20 உலகக்கிண்ணம், ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் என அங்கிகாரத்துக்குரிய பல சம்பியன் கிண்ணங்களை ஏந்திய இலங்கை அணிக்கு, இந்த சாதனை மட்டும் கரையோரம் ஒதுங்கியிருக்கும் கற்களில், அலைகள் வந்து மோதுவது போல் இருந்தது.
அடுத்தடுத்து பல அணி வீரர்கள் இரட்டை சதம் அடித்த போதும், இலங்கை கிரிக்கெட் இரசிகர்களால், ஜாம்பவான் சனத் ஜயசூரிய 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக விளாசிய 189 ஓட்டங்களை எண்ணி மட்டுமே மகிழக்கூடியதாக இருந்தது.
இலங்கை வாழ் இந்திய இரசிகர்களின் கேலிக்குள்ளாகும் போதேல்லாம், இந்தியாவுக்கெதிரான சனத் ஜயசூரிய நிகழ்த்திய சாகச விளையாட்டை நினைவுக்கூர்ந்தே இலங்கை இரசிகர்கள் திருப்தியடைந்து வந்தனர்.
ஆனால், இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்ளுமே கொண்டாடும் ஒரு இன்னிங்சை விளையாடி, மெய்சிலீர்ப்புடன் இலங்கை இரசிகர்களை கௌரவத்துக்குரிய ஒரு அரியாசனத்தில் அமர வைத்திருக்கிறார் பெத் டூம் டூம் நிஸங்க…
ஜயசூரியவின் கரகோஷத்துக்கு தீனி போடுவாரா என மைதானத்தில் குழுமியிருந்த இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, இரசிகர்களின் குறைதீர்த்தார் நிஸங்க…
இப்போட்டியின் வெற்றி-தோல்வி அப்பாலிருக்க.., கிரிக்கெட் சாதனைப் புத்தகத்தில் இலங்கையின் பெயரை அழுத்தமாக முத்திரை பதித்த கொண்டாட்டத்துக்குரிய இந்நன்நாளை கொண்டாடுவோம்… கொண்டாடியே தீர்ப்போம்…