இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்துள்ளது.
கண்டி- பல்லேகலே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களையும் அவிஷ்க பெணார்டோ 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பரீட் அஹமட் மலிக் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் நபி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 382 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி, 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டமிழக்காது 149 ஓட்டங்களையும் மொஹட் நபி 136 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இருவரும் இணைந்து 242 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர். இதுவே ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஆறாவது விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது ஆறாவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.
குறிப்பாக மொஹமட் நபி (136 ஓட்டங்கள்) மற்றும்; (149 ஓட்டங்கள்) இவையே இவர்களின் ஓருநாள் கிரிக்கெட்டின் பெறப்பட்ட தனிப்பட்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
அத்துடன் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்யின் 149 ஓட்டங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில், துடுப்பாட்ட வீரரொருவர் பெற்றுக்கொண்ட மூன்றாவது அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவானது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 139 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 20 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸங்க தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறு தினம் (ஞாயிற்றுக்கிழமை) கண்டி- பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.